இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை பற்றிய விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகளை இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு ஏறத்தாழ 27 வருடங்களுக்குப் பின்னரே வடக்கு கிழக்கிற்கான மாகாணசபை தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைவெளியால் மாகாணசபைக்கான அதிகார ஏற்பாடுகள் சில மத்திமயப்படுத்தப்பட நேரிட்டுள்ளது.
ஆனாலும் இதை மாற்றியமைக்க தமிழ் மக்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் 2013 ஆம் ஆண்டு விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் கிடைத்தது எனவும் அவர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டினர்.
அத்தோடு மக்களை உசுப்பேற்றி வாக்குகளை அபகரித்து மாகாணசபையை கைப்பற்றியிருந்தனர். ஆனால் எதையும் செய்யாது காலத்தை வீணடித்தவிட்டு இன்று கதையளந்து வருகின்றனர் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீதியரசர் விக்னேஸ்வரன் இந்த விடயம் தொடர்பில் எந்தவித அக்கறை எடுக்கவில்லை. 13 இல் இருக்கும் இவ்வாறான பலவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.