May 29, 2025 19:32:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: சட்டத்தரணி ஹிஜாஸ் 10 மாதங்களின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், 10 மாதங்களின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சட்டத்தரணி ஹிஜாஸை பொருத்தமான நீதவான் நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில், சட்டத்தரணி ஹிஜாஸ் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு கீழான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சதித்திட்டம் தீட்டியமை மற்றும் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மத்ரஸா பாடசாலையொன்றின் அதிபர் மொஹமட் ஷகீல் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.