July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலின் போது 6000 வாள்கள் இறக்குமதி: பேராயரின் மனுவை விசாரிக்க உத்தரவு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 6000 வாள்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேராயரின் ரிட் மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதேநேரம், சம்பவம் குறித்து இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் விளக்கமளிக்க பொலிஸ்மா அதிபர் உட்பட மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர மற்றும் நீதியரசர் மாயாதுன்னே கொராயா ஆகியோரை உள்ளடக்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் இவ்வாறு அழைப்பாணை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் சிலரால் நாட்டுக்கு 6000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் காணப்படுவதாக, பேராயர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.