
பாரதிய ஜனதா கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக இலங்கையில் செயற்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் கட்சியாக உருவாக முடியாது, ஆனால் அந்தக் கட்சியின் பிரதிநிதியாக இங்கு ஒரு கட்சி உருவாகி அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆட்சியமைக்க திட்டமிட்டு வருவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமான எந்த அறிவித்தலும் அந்தக் கட்சியினால் விடுக்கப்படவில்லை. இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பா க பதிலளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், ஆனால் தனது தனிமைப்பட்ட நிலைப்பாட்டையே அறிவிக்க முடியுமென்று கூறியுள்ளார்.
இலங்கையின் அரசியல் அமைப்பு ரீதியில் அந்தக் கட்சியிக்கு தேர்தல்கள் திணைக்களம் அனுமதியளிக்காது. ஆனால் அவர்களால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு அனுமதி இலங்கையில் உள்ளது. இதன்படி ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையை பரப்பலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும். கூட்டமைப்பினர் இன்னும் விடுதலைப் புலிகளின் கொள்கையிலிருந்து மாறாமையினால் இதனூடாக பாரதிய ஜனதா கட்சி இலங்கைக்குள் நுழையலாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.