
யாழ்ப்பாணம் காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான காணியைக் ‘கடற்படை முகாம்’ அமைக்கும் நோக்கில் அளவீடு செய்ய முற்படுகையில் அங்கு சென்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பலத்த எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
‘காணி எலறா’ எனப்படுகின்ற கடற்படைத்தளத்துக்கு சொந்தமாக்கும் நோக்கில் அதிகாரிகளால் காணியை அளவீடு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தனியாருக்குச் சொந்தமான காணியானது கடந்த 2012ஆம் ஆண்டளவில் காணி உரிமையாளரால் காரைநகர் இந்துக் கல்லூரியின் மைதானத்துக்கென வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இற்றைவரை குறித்த காணியானது கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றமையால் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த காணி இன்று அளவீடு செய்யப்படவுள்ளது என்ற தகவல் கிடைத்ததையடுத்து அங்கு கூடியவர்கள் அளவீடு செய்ய வந்தவர்களுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன் குறித்த பகுதி பிரதேச செயலரையும் சந்தித்துக் கலந்துரையாடி அளவீடு செய்யும் நடவடிக்கைகளையும் அவர்கள் இடைநிறுத்தியுள்ளனர்.
இந்தக் காணிக்குப் பதிலாக வேறு காணியை வழங்குவது தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோது அதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்தக் காணி உட்பட ஏனைய தனியார் மற்றும் பொதுக்காணிகளைக் கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் மேற்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.