பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று மாலை முதல் நீக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி முதல் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இலங்கையில் தரையிறக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கூட்டத்தில், பிரிட்டனில் இருந்து விமானங்கள் வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தத் தடையை நீக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
சுகாதார நடைமுறைகளுக்கமைய பிரிட்டனில் இருந்து வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், பிசிஆர் பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.