
இலங்கையில் விக்னேஸ்வரனைப் போன்ற சிந்தனையில் உள்ள இந்திய மாநில முதலமைச்சர் ஒருவரே பாரதிய ஜனதா கட்சி இங்கு ஆட்சியமைக்கும் என்ற கருத்தைக் கூறியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆட்சியமைக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் வட மாகாண சபை முதல்வராக இருக்கும் போது, வடக்கில் சிங்கள மக்கள் வாழ்க்கை நடத்த உரிமை இல்லை எனத் தெரிவித்திருந்ததாகவும், அவ்வாறான இந்திய முதலமைச்சர் ஒருவரே இதனையும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அரசியல் கட்சியொன்றை அமைத்து, ஆட்சி பீடமேறுவதாக மாநில முதலமைச்சர் ஒருவர் மாத்திரமே கூறியுள்ளதாகவும், அது இந்தியாவின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறையாண்மையுடன் உள்ள ஒரு நாட்டுக்கு அவ்வாறான எச்சரிக்கைகளை விடுக்க முடியாது என்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்துக்கொண்டு செயற்படுவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.