இலங்கையின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று கொரோனா தடுப்புக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சபாநாயகருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மைத்திரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்றும் செயற்பாடு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
சபாநாயகருக்கு தடுப்பூசி வழங்கும் போது, இலங்கைக்கான இந்திய தூதுவரும் இராணுவ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
அயல் நாடுகளின் மற்றும் ஆரோக்கியத்துக்காக இந்தியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் கடந்த மாதம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசி இந்திய உயர் ஸ்தானிகர் பிரசன்னத்துடன் கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு ஏற்றப்பட்டது. அயலவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்துக்காக தனது ஆளுமையை பிரயோகிக்க இந்தியா திடசங்கற்பம் பூண்டுள்ளது.
— India in Sri Lanka (@IndiainSL) February 17, 2021
தம்மைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு தடுப்பூசி இறுதியாக வழங்கப்பட்டாலும் பரவாயில்லை என்றும் பொது மக்களுக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரையில் 196,163 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டதோடு, இன்று சபாநாயகர் உட்பட 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.