அடுத்து வரும் நான்கு வருடங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து பால் மா இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்து, திரவப் பால் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்கும் நோக்கிலேயே பால் மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நியூசிலாந்தில் இருந்து அதிகளவில் பால் மாவை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதுடன், நாளொன்றுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பால் மா இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்து நாட்டுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மகிந்தானந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பயறு, கச்சான், எள்ளு உள்ளிட்ட உற்பத்தியில் ஏற்கனவே இலங்கை தன்னிறைவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர், இதேபோன்று மற்றைய உணவுப் பொருள் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்ததும், அந்த பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.