புதிய ரக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு நகர மக்களுக்கு விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் ருவான் விஜேமுனி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் கொழும்பு நகரிலும் தீவிரமாக பரவி வரும் நிலையிலேயே அவர் இவ்வாறாக கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால் திருமண நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதையும் மற்றும் மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பொது இடங்களில் நடமாடும் போது முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் இல்லாவிட்டால் கொழும்பில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என்றும் வைத்தியர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.