
இலங்கையில் பாரதிய ஜனாதா கட்சி ஆட்சி அமைக்கும் திட்டம் தவறுதலாகக் கூறப்பட்ட விடயமொன்றல்ல என்றும் அவர்கள் இலங்கையில் உள்ள பிரதான கட்சியொன்றைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தொண்டமான் அல்லது அவரது மகனைக் கொண்டு இலங்கையில் கட்சி அமைப்பதைப் பற்றிக் கூறவில்லை என்றும் அவர்கள் பிரதான கட்சியொன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் தோல்வியடைந்த இந்தியா, தமது கட்சியொன்றை இலங்கையில் ஆட்சி பீடமேற்றுவதன் மூலமே இந்த நிலைமையை மாற்றியமைக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் திட்டங்களை வழங்கி, தனிநபர்களை விலைக்கு வாங்கி, செல்வாக்குச் செலுத்தி வந்த இந்தியா, இனியும் அதனைத் தொடர முடியாதென்பதை உணர்ந்துள்ளதாகவும் டாக்டர் வசந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்த நிலையில், அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியவர்களின் எதிர்ப்பால் குறித்த தீர்மானம் கைவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலைமைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் முகங்கொடுக்க நேரிடும் என்பதால், இலங்கையின் பிரதான அரசியல் கட்சியொன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.