
பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான பிரச்சனை இன்னும் தீரவில்லை.
ஆயிரம் ரூபா என்ற கோரிக்கை 6 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். அதனை வலியுறுத்தி தொழிலாளர்களுடன் இணைந்து நாமும் போராடினோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு முன்னர் இருந்த பொருளாதார நிலைக்கேற்பவே அந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் கிடைக்கவுள்ள ஆயிரம் ரூபாவும் போதாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உரிமைகள் மற்றும் சகல அந்தஸ்த்துகளுடனும் பெருந்தோட்ட மக்கள் வாழ வேண்டும். இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு மலையகத் தலைவர்கள் கூட நடவடிக்கை எடுத்ததில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சம்பள நிர்ணய சபையில் எமது அங்கத்தவர்கள் இருவர் அங்கம் வகிக்கின்றனர். சம்பள உயர்வுக்காக அவர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தம் ஊடாக கிடைக்கப்பெறும் சலுகைகள் கிடைக்கப்பெறுமா? என்ற கேள்வியும் எழுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இல்லாது செய்யப்பட்டால் அவற்றை பெறுவதற்காக நாம் போராடுவோம். தொழிலாளர்களின் உரிமைக்காக நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.