November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் முஸ்லிம்களை ‘மன்னிப்பு’ நாடகத்தின் மூலம் ஏமாற்ற முயற்சி

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘மன்னிப்பு’ என்ற புதிய நாடகத்தை அரங்கேற்றி வருகின்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனைத் தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இதனைத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நடைமுறைகளைக் கூறி வாக்குகளைப் பெற்றவர்கள், இப்போது சகல தவறுகளையும் செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உண்மையாக இருந்தால், தவறுக்கான கசையடியை வாங்கிக்கொண்டே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியலலில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் முஸ்லிங்களுக்கு மட்டுமான எம்.பிக்கள் இல்லை என்றும் சிங்கள, தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்துள்ளதாகவும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

தாம் அனைத்து மக்களினதும் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்க கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசாங்கத்தினால் எதிர்வரும் காலங்களில் காதிநீதிமன்றங்கள், மத்ரஸாக்கள் போன்றன சிக்கலில் மாட்டிக்கொள்ள போகின்றதாகவும், அவற்றை சரியாக அணுகி மக்களுக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.