July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போர்க் குற்றச்சாட்டு தொடர்பான சர்வதேச விசாரணையை இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது’

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறையொன்றுக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் அரசியல் கட்சிகளுக்கிடையே மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் போது, அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்பெயின், ருமேனியா ஆகிய நாடுகளில் தூதரகங்களை அமைப்பதற்கும் மடகஸ்காரில் தூதரக அலுவலகமொன்றை அமைப்பதற்கும், லீக்கின்ஸ்டைன் நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.