November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயங்கரவாதிகளுக்கு புத்துயிரூட்ட வடக்கின் தமிழ் ஊடகங்கள் முயற்சி’

வடக்கில் உள்ள தமிழ் ஊடகங்கள் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தும், பயங்கரவாதிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலும் செயற்படுகின்றன.பயங்கரவாதிகளின் தலைவரை வாழ்த்தும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக வடக்கு ஊடகம் ஒன்று வழக்கை எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு துணைபோவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

பயங்கரவாதத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக வடக்கில் உள்ள தமிழ் ஊடகங்கள் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தும், பயங்கரவாதிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும், பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் அரசியல்வாதிகளினதும் கட்டுரைகளையும், செய்திகளையும் பிரசுரித்து வருகின்றன.

ஊடகங்கள் நடுநிலையுடன் செயற்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு துணைபோனால் நாட்டின் சட்டத்துக்கு அமைய அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் ஒரு ஊடகம் பயங்கரவாதிகளின் தலைவர் பிரபாகரனை வாழ்த்தும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக நீதிமன்றில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை புகழ்ந்து – அந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை நாட்டில் சில தனியார் அமைப்புகளும் பயங்கரவாதத்துக்கு துணைபோகும் வகையில் செயற்படுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாட்டின் சட்டத்தை மீறியதாக இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் உள்ளன. அந்த அமைப்புகளும் நாட்டின் சட்டத்துக்கு அமையவே செயற்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.