January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மின் திட்டம் தொடர்பில் இந்தியாவின் கவலைக்கு சீனா பதில்

இலங்கையின் வட மாகாணத்தில் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மின் திட்டங்கள் முற்றிலும் ஒரு திறந்த சர்வதேச ஏலச்சீட்டு செயல்முறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வணிக நடவடிக்கை என்று இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த மின் திட்டங்களில் சீனாவின் ஈடுபாடு குறித்து இந்தியா எழுப்பியுள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள மூன்று தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இந்த திட்டத்தினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் அடிப்படையில் இந்தியா கவலை வெளியிட்டிருந்தது.

இதற்க்கு பதிலளித்துள்ள இலங்கைக்கான சீன தூதரகம்;

“இது சர்வதேச ஏல நடைமுறைகளுக்கு உட்பட்டது.எந்தவொரு நாட்டினதும் நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சீனாவின் கொள்கையாகும்.அந்த அடிப்படையில்,இலங்கையின் ஒத்துழைப்புடன், இலங்கை சட்டங்களுக்கும் சர்வதேச விதிகளுக்கும் கட்டுப்பட்டு,இவ்வாறான திட்டங்களை செய்வதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சொந்த நாட்டின் வளர்ச்சியையும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியும் ”என்று சீன தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி மூலம் செயற்படுத்தப்படும் திறந்த முயற்சியாகும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,ஒரு இறையாண்மை கொண்ட நாடான இலங்கைக்கு தங்களுடைய நலனுக்காக பொருத்தமான ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.