இலங்கையின் யுத்தத்தை வெற்றிகொண்ட போர் வீரர்கள் வெளிநாடு செல்வதையோ அல்லது வெளிநாடுகளில் வேலை செய்வதையோ சாத்தியமற்றதாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண கால்வாய் அபிவிருத்தித் திட்டத்தின் மஹகித்துலா மற்றும் மஹகிருல நீர்த்தேக்கங்களின் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைத்து, உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டின் போர் வீரர்களுக்கு எதிரான மனித உரிமைத் தீர்மானங்களை ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மிக மோசமான பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிய போதிலும் தாம் நாட்டின் அபிவிருத்தியை கைவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் வீரர்கள் வெளிநாடு செல்வதையோ அல்லது வெளிநாடுகளில் வேலை செய்வதையோ சாத்தியமற்றதாக மாற்றும் முயற்சிகள் வெற்றியளிக்க இடம்கொடுப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பொருளாதார திட்டங்களையும் தாம் வகுத்துள்ளதாகவும், நாட்டில் குடிநீர் பிரச்சினையை அடுத்த சில ஆண்டுகளில் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.