January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வடக்கில் உள்ள தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் மாற்றமில்லை”

வடக்கில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் கிடையாது என்று இலங்கை அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சூரிய சக்தி மின் உற்பத்திகளுக்காக வடக்கிலுள்ள தீவுகளை  சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா? எனவும், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? என்றும் அந்த ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, விலைமனுக் கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அந்த தீவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக  தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்காதமையால் அந்த தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.