தமது வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வுகாணுமாறு வலியுறுத்தி சித்தமருத்துவ பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.
சித்த மருத்துவ பட்டதாரியாகி நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும், இன்னும் பட்டதாரிகள் நியமனங்களுக்குள் தாம் உள்வாங்கப்படவில்லை எனவும், இதனால் ஜனாதிபதியும், பிரதமரும் இதில் தலையிட்டு தமது கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டுமென்று பேரணியில் கலந்துகொண்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
வேலையற்ற சித்தமருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது, சித்தமருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்தியசாலை வரையில் நடத்தப்பட்டது.
தமது போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியம் ஆதரவளித்த போதிலும், அந்த பேரணியில் மாணவர்களை கலந்துகொள்ளவிடாது தடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.