January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொலிஸார் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்கி தடையுத்தரவுகளைப் பெறுகின்றனர்’

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், பொலிஸார் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் பிழையாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அதன் நோக்கங்களுக்கு அமைய பெற்றுக்கொள்ளவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி தொடர்பில், மனோ கணேசன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே இதனை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாங்குளம் பொலிஸாரினால், முல்லைத்தீவு நீதிமன்றத்தில்  பெறப்பட்டதாக கூறப்படும் தடையுத்தரவை பெப்.6ம் திகதி மீறியதாக தம்மீது பொலிஸாரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஒருபோதும் எந்தவித தடை உத்தரவும் நேரடியாக வழங்கப்படவில்லை எனவும் தாம் கோவிட்19 சுகாதார வழிமுறைகளை எப்போதும் கடைபிடித்து வருவதாகவும் மனோ கணேசன் தமது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஆர்ப்பாட்டங்களை, ஒன்று கூடல்களையும் கொழும்பு மாநகரில் தினசரி காண்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் ஒரே மாதிரியான சம்பவங்களுக்கு, வெவ்வேறு சட்டங்கள் இந்நாட்டில் இருக்கின்றன என நம்புவதற்கு தமக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை எனவும் தமது வாக்கு மூலத்தில் பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவர் என்ற வகையில் தாம் சட்டம், ஒழுங்கை மதிப்பதாகவும்  ஆனாலும், அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸா் பெற்றுக்கொள்வதையிட்டு தாம் கவலை மற்றும் சந்தேகம் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேற்கண்ட பேரணி, அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்பட்டதே தவிர, அது நாட்டை எதிர்த்து நடைபெறவில்லை. அத்தோடு பேரணி எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு நடத்தப்பட்டதால், அதிலிருந்து பின்வாங்க தமக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை எனவும் தமது வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினரும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.