July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யலாம் என்பது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம்’

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விடயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானதென்றும், ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சரவைக்கு அந்த முடிவை மாற்றும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்த நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் உதய கம்மன்பில தெளிவுபடுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் அவரது தனிப்பட்ட விருப்பத்தையே வெளிப்படுத்தியதாகவும் இணை அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவில் மூன்றாம் நபர்கள் அல்லது அரசியல்வாதிகள் தலையிடமுடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அல்லது அமைச்சரவைக்குகூட இல்லை என்றும் அந்த அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு மட்டுமே உள்ளது என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.