இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
யுத்த குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்க முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் உலகளாவிய தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில், தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகம் பதிலளித்தள்ளது.
இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கைதுசெய்து, விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, கொலை செய்யப்பட்டதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, ஒப்புக்கொண்டதாக ஸ்டீபன் ராப் தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தபோது, அவர் இதனை ஒப்புக்கொண்டதாக ஸ்டீபன் ராப் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அமெரிக்க தூதுவரின் குற்றச்சாட்டு அடிப்படைத் தன்மையற்றது எனக் கூறியுள்ள ஜனாதிபதி அலுவலகம், பதவியில் இருந்து விலகி 7 ஆண்டுகளின் பின்னர் இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ “ஓ, வழக்கு விசாரணைகள், விசாரணைகள்… அவை இழுபட்டுக் கொண்டே செல்லும், பின்னர் அவர்கள் (குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்கள்) விடுதலையாகி விடுவார்கள்… என்றும் அதனால் ‘நான் அவர்களைக் கொலைசெய்துவிட்டேன், நான் அவர்களைக் கொலைசெய்துவிட்டேன், நான் அவர்களைக் கொலைசெய்துவிட்டேன்” என்று கூறியதாகவும் ஸ்டீபன் ராப் நினைவுகூர்ந்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கைதுசெய்து, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் வழக்குத் தொடர்ந்து இருக்கலாமே என்று தான் கேட்டதற்குப் பதிலளிக்கும் போதே, கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்ததாகவும் ராப் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள், இந்திய இராணுவம் உட்பட ஏனையவர்கள் செய்த அட்டூழியங்களை விசாரணை செய்வதில் ஐநா தோல்வியுற்றுள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவை கூடவுள்ள நிலையில், ஸ்டீபன் ராப் வெளியிட்டுள்ள கருத்து, இலங்கையை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.