மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரும், பதில் செயலாளாருமாகிய தயாபரனின் கடமை அதிகாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர சபையின் ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர்.
மாநகரசபை நலன்புரிசங்கம் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஒருமணி நேரம் கடமைப் பகிஸ்கரிப்புடன், காலை 9 மணியளவில் மாநகரசபைக்கு முன்னால் ஒன்றிணைந்த ஊழியர்கள், ஆணையாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்துகொண்டனர்.
மாநகரசபைக்கு முன்னால் இருந்து நகரின் மத்தியிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரம் வரை பேரணியாக சென்ற அவர்கள், பின்னர் அங்குள்ள காந்தி பூங்காவில் சில நிமிடங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மாநகர சபை நோக்கி மீண்டும் பேரணியாக வந்து ஆளுநருக்கான மகஜர் ஒன்றை மாநகரசபை ஆணையாளரிடம் கையளித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள மட்டக்களப்பு மாநகரசபை முல்வருக்கும், புதிதாக கடமையேற்ற ஆணையாளர் தயாபாரனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலைமையால் கடந்த 8ம் திகதி சபையின் அமர்வில் ஆணையாளரின் அதிகாரத்தை குறைக்கும் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அதன்போது சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட 18 பேர் சபையில் இருந்து வெளியேறிய நிலையில் 20 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.