மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இம்முறை மகா சிவராத்திரியின் போது வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரம் சிவராத்திரி நிகழ்வின் போது அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வழமையாக மகா சிவராத்திரி நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறுவதுடன், அதில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்வர்.
ஆனால் இம்முறை அவ்வாறாக வெளி மாவட்டங்களை சேர்ந்தோரை அனுமதிப்பது சிக்கலானது என்று நேற்றைய கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி மார்ச் மாதம் 11 ஆம் திகதி மஹா சிவராத்திரி நிகழ்வினை சுகாதார முறைமைகளை பின்பற்றி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மகா சிவராத்திரி அன்று நடத்தப்படும் பாலாவி தீர்த்தக்காவடி நிகழ்வை இம்முறை நடத்தாதிருக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் திணைக்கள தலைவர்கள்,திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருக்கள், ஆலய நிர்வாக சபையினர், பொலிஸார், சுகாதார துரையினர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.