July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் மீதான ஆட்சேபனை காலம் நிறைவடைந்தது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடி சம்பள விடயம் தொடர்பாக இறுதித்தீர்மானம் எடுக்கவுள்ளது.

இதனை தொடர்ந்து ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமென்று பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளிவரும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறையினருக்கான நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கு அமைய 900 ரூபா அடிப்படை சம்பளம் அடங்கலாக 100 -140 ரூபா வரையிலான மேலதிக கொடுப்பனவுடன் சம்பளத்தை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபை கடந்த 7 ஆம் திகதி தீர்மானித்திருந்தது.

இது தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டிருந்த ஆட்சேபனை காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள ஆட்சேபனைகளை ஆராயும் வகையில் 19 ஆம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளது.