November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பாரதிய ஜனதா கட்சி தொடர்பான செய்திகளை இலங்கை அரசாங்கம் நம்பவில்லை”

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆட்சியமைக்கும் திட்டத்தில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் வெறும் கட்டுக்கதையே என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் குமார் வெளியிட்டுள்ள கருத்தானது உத்தியோகபூர்வமானது அல்லவெனவும், இதனால் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கூற முடியாது எனவும் அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் பாஜக உள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் குமார் டெப் தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக, கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதன்போது குறிப்பிட்ட அமைச்சர் உதய கம்மன்பில, ”இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வாறு கூறியுள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் குமார் கருத்து வெளியிட்டுள்ளாரே தவிர, அமித் ஷா எங்கேனும் அவ்வாறு கூறியுள்ளதாக செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் இந்த விடயத்தை நாங்கள் வெறும் வதந்தியாகவே பார்க்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக பாரதிய ஜனதா கட்சி அவ்வாறு அறிவிக்குமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் அதுபற்றி பதிலளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.