
மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதற்கமைய குறித்த திருத்தங்களை மேற்கொள்ள தயாராகவிருப்பதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்பிக்க நடவடிக்கையெடுப்பதாகவும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, ஊதிய ஆணைக்குழு, நிர்வாக சேவைகள் திணைக்களம், விலைமதிப்பு திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான பிரச்சனைகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் காணப்படும் சிக்கல்கள் குறித்து உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இச்சந்திப்பின்போது பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.
இதன்போது, கொவிட் -19 நிலைமை காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அத்துடன் இந்நிறுவனங்களில் ஊழியர் பற்றாக்குறை பல நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் மொரட்டுவ மாநகர சபை மேயர் சமன்லால் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ண, உள்ளூராட்சி ஆணையாளர்கள், மேயர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.