ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் தொடர்பாக அல்லாது வேறு யார், யாரையோ குற்றவாளிகளாக்கியே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சஹரான் என்பவரே ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர். ஆனால் அந்தத் தாக்குதலுக்கு அவரை தூண்டியவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அவர்கள் யார் என்பதனையே வெளிப்படுத்த வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், தற்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவையும் கொல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக நாமல் குமார என்பவர் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள இராஜஙாக் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இதன்படி அந்தத் திட்டங்களின் பின்னால் சஹரான் மட்டும் இருந்திருக்க முடியாது எனவும், இதனால் அவர்கள் யார்?, பின்னால் இருந்த நாடு எது என்ற தகவலும் வெளியிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.