ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
தாம் தற்போது பல நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளுடனான பேச்சுவார்த்தை நகர்வுகள் முடிவுக்கு வரும் என்றும் அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதளவில் தாம் சீனாவின் முழுமையான ஆதரவையும், ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மீது இதற்கு முன்னர் 30/1 பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அதற்கு எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்ட நாடுகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.