July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசியல் மிரட்டல்களுக்கு நான் பயந்தவன் அல்ல”

”அரசியல் ரீதியிலான சவால்கள் மற்றும் மிரட்டல்களுக்கு நான் ஒருபோதும் பயந்தவன் இல்லை” என்று, தனக்கு எதிராக அரசாங்கத்திற்குள் எழும் எதிர்ப்புகள் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை நியமிக்க வேண்டுமென்று ஊடகமொன்றுக்கு விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கருத்து தொடர்பாக அவர் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதுடன், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

அத்துடன் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள விமல் வீரவன்ச,  ஜனாதிபதியை அரசியல் ரீதியில் பலப்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தே தான் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது தனக்கு எதிராக அரசியல் ரீதியில் சவால்களும், மிரட்டல்களும் விடுக்கப்படுவதாகவும் இது தொடர்பாக தான் பயமடையவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜேவிபியில் இருந்து வெளியேறும் போது இதனை விடவும் பெரிய சவால்களையே தான் சந்தித்ததாகவும், இதனால் தற்போதைய சவால்கள் ஒன்றும் தனக்கு பெரிதல்ல என்றும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.