November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்”

இலங்கையில் பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் ஆரம்பக் கட்டமாக, மேல் மாகாணத்தில் மக்களுடன் நெருக்கமாக பழகும், தொற்று ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நபர்களுக்கு தடுப்பூசியை ஏற்ற ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த தடுப்பூசிகளையே இவ்வாறாக செலுத்துவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 27 ஆம் திகதி இந்தியாவினால் இலங்கைக்கு ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக இந்த தடுப்பூசிகளை சுகாதார, பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட கொவிட் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தரப்பினருக்கு செலுத்தப்பட்டது.

இதுவரையில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ளதாக தடுப்பூசிகளை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பொதுமக்களிடையே விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய தரப்பினருக்கு செலுத்துவதற்கு இன்று முதல் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.