January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வலிகாமம் பாடசாலை ஒன்றில் 70 மாணவர்களுக்கு துன்புறுத்தல்’: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் 70 மாணவர்கள், ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, குறித்த வகுப்பில் உள்ள 70 ஆண் மாணவர்களையும் பாடசாலை வளாகத்திலுள்ள மறைவான இடமொன்றுக்கு அழைத்துச் சென்று, ஆடைகளை களையுமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர்களின் அறிவுறுத்தலை மீற முடியாமல் தாம், சித்திரவதைக்கு உள்ளாகியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனவும் தெரிவித்து, மாணவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாணவர்களின் முறைப்பாடு கடந்த 11 ஆம் தமக்குக் கிடைத்ததாகவும், சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.