July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை தடுப்பூசி விநியோகத்தில் 35 ஆயிரம் டோஸ்களை வீணடித்துள்ளது’: சுகாதார பணியகம்

இலங்கை கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி விநியோகத்தில், 35 ஆயிரம் மருந்து டோஸ்களை வீணடித்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் விநியோகிக்கப்படும் ஒரு தடுப்பூசியை 10 க்கும் அதிகமானவர்களுக்கு பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சுகாதார பணிப்பகம் தெரிவித்துள்ளது.

கொவிட்- 19 தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வழங்கப்படும் தடுப்பூசிகளில் இதுவரையில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 35 ஆயிரம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.

ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியின் ஒரு மருந்துக் குப்பியில் இருந்து பத்து நபர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்ற முடியுமாக இருந்தாலும், குறைவானவர்களுக்கு ஏற்றப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு வீணாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி, ஒரு தடுப்பூசி மூலம் பத்திற்கும் அதிகமான நபர்களுகளுக்கு ஏற்றுவதற்கு முயற்சிப்பதாகவும், சிறிதளவேனும் மருந்துகள் வீணடிக்கப்படக்கூடாது சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.