இலங்கையில், கடந்த வருடத்தில் சுமார் 5,000 கோடி ரூபா ( 50 ஆயிரம் மில்லியன் ரூபா) பெறுமதியான சீனி மற்றும் இனிப்பு பண்டங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பெரும்பாலான பொருட்களுக்கான இறக்குமதி செலவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சீனி மற்றும் இனிப்பு பண்டங்களுக்கான இறக்குமதி செலவு 2020 ஆம் ஆண்டில் 277.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இதற்கான செலவு 201.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் 75.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இது ஒப்பீட்டளவில் 37.7 % அதிகரிப்பு எனவும் இலங்கை நாணய மதிப்பில் சுமார் 50 ஆயிரம் மில்லியன் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருட்களுக்கான இறக்குமதி செலவு 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் 34.7 மில்லியனால் குறைவடைந்துள்ளது.
தனியார் வாகன இறக்குமதி 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் 65% விதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.