கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்காதிருப்பதற்காக சீனாவினால் எந்தவித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களில் இடம்பெற்றுள்ள சம்பவங்களை தொடர்ந்து இந்தியா – இலங்கை இடையிலான உறவு எப்படி இருக்கின்றன என்று, அந்த நேர்காணலில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த அவர், ”இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஒரு வேலைத்திட்டத்தில் தங்கியிருக்கவில்லை. பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இந்தியா இலங்கையில் முன்னெடுக்கின்றது. இதனால் உறவு பலமானதாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிழக்கு முனைய விடயம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னால் சீனாவின் தலையீடு இருந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், ”தொழிற்சங்கங்கள், பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகளினாலேயே போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் சீனாவின் அழுத்தங்கள் இருந்ததாக நான் கருதவில்லை. எவ்வாறாயினும் மேற்கு முனையம் தொடர்பாக இந்தியாவுடன் கலந்துரையாடி வருகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.