July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை’

இலங்கையில், நாடு பூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள அதிக வீரியத்துடனான புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த நாட்களில் நாட்டில் சில பகுதிகளில் புதிய வகை வைரஸ் தொற்றுடன் நபர்கள் அடையாளம் காணப்படுவதாக பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வுப் பிரிவு மேலும் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே , இலங்கையில் அதிக வீரியத்துடனான புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாளாந்தம் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு நாடு பூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை உள்ளதா? என்பது தொடர்பில் செயலணி கூட்டத்தில் கலந்துரையாடப்படுமென  பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.