
கடற் தொழில்சார் மற்றும் நீர் வேளாண்மை தொடர்பான விடயங்களில் மாலைதீவுடன் தொழில்நுட்ப அறிவுசார் அனுபங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை எல்லை தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் மாலைதீவில் கைது செய்யப்படுகின்ற இலங்கை மீனவர்களை இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாகக் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஓமர் அப்துல் ரசாக் அமைச்சரை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது கொவிட் 19 காரணமாக அண்மைக் காலமாக இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கவலை வெளியிட்ட மாலைதீவு தூதுவர், குறித்த தடையினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் பரிமாற்றங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவினை மேலும் வலுப்படுத்தும் எனும் கருத்தினை வரவேற்றுள்ளார்.
அத்துடன், எல்லைத் தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் மாலைதீவினால் கைது செயய்யப்படுகின்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றமையினால் இரண்டு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.