July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணாமல் போனோர் அலுவலகத்தை நடத்திச்செல்ல நாம் விரும்பவில்லை’ – அமைச்சர் சரத் வீரசேகர

காணாமல் போனோர் அலுவலகத்தை நடத்திச்செல்ல நாம் விரும்பவில்லை, அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி ஒதுக்குவதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இராணுவத்தை கொன்ற, தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்திய நபர்களுக்கு நட்டஈடு கொடுக்க நாம் அனுமதிக்க முடியாது. பயங்கரவாதிக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுத்து தேசத்தை காப்பாற்றியவர்களைத் தண்டிக்க கூறுவதில் என்ன நீதி உள்ளதென நாமும் கேள்வி கேட்கிறோம் என்றார்.

எமக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் பொறுப்புக்கூறலில் இருந்து விடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு தொடர்ச்சியாக எமக்கு பாடம் கற்பிக்கவே மனித உரிமைகள் ஆணைக்குழு முயற்சித்து வருகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்ட போதும், பொதுமக்கள் பணயம் வைத்து போர் நடத்தப்பட்ட போதும் மனித உரிமைகள் குறித்து பேசாதவர்கள் இன்று இராணுவம் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அதேபோல் எமது தேசிய விசாரணை பொறிமுறைகளுக்கு சர்வதேசம் இடமளிக்கவில்லை, உள்ளக அறிக்கைகளை நாம் முன்வைத்தால் அது பக்கசார்பானது என நிராகரிக்கின்றனர், அப்படியென்றால் எவ்வாறு நாம் முகங்கொடுப்பது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இம்முறை மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் ஐந்து நாடுகள் கொண்டுவரும் பிரேரணையை நிராகரித்து, இலங்கை  புதிய பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர  குறிப்பிட்டார்.