இலங்கையில் அதிக வீரியத்துடனான புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாளாந்தம் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு நாடு பூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை உள்ளதா? என்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய செயலணி கூடி ஆராயவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது வரையில் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும், நாளைய தினத்தில் கூடவுள்ள செயலணி கூட்டத்திலேயே இது தொடர்பாக கலந்துரையாடப்படுமெனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய நிலைமை தொடர்பாக தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவு அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அந்தப் பிரிவினால் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக யோசனைகளை முன்வைக்குமெனவும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாத காலப்பகுதியில் இலங்கையில் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன், 370 ற்கும் மேற்பட்டோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள அதிக வீரியத்துடனான புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த நாட்களில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் புதிய வகை வைரஸ் தொற்றுடன் நபர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதிய வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளதால், அதனை கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாளைய தினத்தில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய செயலணி கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.