January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளே தவிர பொதுமக்கள் அல்ல’ : அமைச்சர் சரத் வீரசேகர

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படாது, மாறாக மனிதாபிமான சட்டத்தின் கீழேயே கண்காணிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்த சட்டத்திற்கு அமைய விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவரும் ‘விடுதலைப்புலிகள்’ என்றே கருதப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்,

இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு ஆயுதப்போராட்டம், விடுதலைப்புலிகளுக்கென இராணுவ கட்டமைப்பொன்று இருந்ததுடன் கடற்படை, விமானப்படைகள் என்பனவும் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு தமக்கான தேசமொன்று அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் தொடர்ச்சியாக போராடக்கூடிய தன்மையும் அவர்களிடம் காணப்பட்டது.

மேலும் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையாக இல்லாது, ஒரு நாட்டுடன் நடத்தும் போராட்டத்திற்கு ஒப்பானது இந்த ஆயுதப் போராட்டம்.

இந்த போராட்டம் தொடர்பில் மனிதாபிமான சட்டமே நடைமுறைப்படுத்தப்படவேண்டுமே தவிர மனித உரிமை மீறல் சட்டமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதடிப்படையில் மனிதாபிமான சட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவருமே ‘விடுதலைப்புலிகள்’ எனவும் அதனடிப்படையில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சட்டத்தை முதலில் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிந்துகொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.