July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரணைதீவில் மிகப்பெரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் அங்குரார்ப்பணம்

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடலட்டை வளர்ப்பு ஏற்றுமதிக் கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுமார் 500 தொழிலாளர்களுக்கு நேரடித் தொழில் வாய்ப்பினை வழங்கும் வகையில் பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

கடற்றொழில் அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய, இரணைதீவை அண்டிய கடற்பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம், கடலட்டை வளர்ப்புக்கு ஏதுவான கடல் பரப்பினை அடையாளப்படுத்தியது.

அத்தோடு இந்தத் திட்டத்திற்குத் தேவையான முதலீடுகளை மேற்கொள்வதற்கும் உற்பத்தி செய்யப்படுகின்ற கடலட்டைகளைக் கொள்வனவு செய்து நவீன தொழில்நுட்ப முறையில் பதனிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் 45 வருட தொழில் அனுபவத்தினைக் கொண்ட சுகந்த் இன்டர்நஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் முன்வந்தது.

இந்நிலையில், முதற்கட்டமாக 83 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தலா ஒரு ஏக்கர் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான ஆரம்ப முதலீடுகள் அனைத்தையும் தனியார் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்பப் பதனிடும் பொறிமுறை உள்ளடக்கப்பட்டதான குறித்த  கடலட்டை ஏற்றுமதிக் கிராமதின் ஊடாக 83 குடும்பங்கள் நேரடித் தொழில் முனைவோராக்கப்பட்டுள்ளனர்.

இதனுடாக சுமார் 500 தொழிலாளர்கள் நேரடித் தொழில் வாய்ப்பினையும் சுமார் 400 இற்கும் மேற்பட்டவர்கள் மறைமுகமான தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.