பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்துவிடக் கூடாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவின் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அடிப்படையாக கொண்டு தற்போது இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு உருவாகி வரும் நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் இந்தியாவுக்கு எதிரானதாக அமைந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தாங்கள் இருப்பதாகவும் இராதாகிருஷ்ணன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவானது எமது குடும்பத்தில் ஒருவர் போல.பல்வேறு இக்கட்டான சந்தரப்பங்களிலும் தமக்கு உதவி வருவதாகவும், இவ்வாறான நேரத்தில் இந்தியாவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பகைத்துக்கொள்வது தவறான அரசியல் நகர்வே என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் விஜயமானது பொருத்தமற்ற ஒரு விடயமாகவே கருத வேண்டியுள்ளது எனவும் இராதாகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.