ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான மிகவும் சக்தி வாய்ந்த அரச கூட்டணியைப் பிளவுபடுத்த உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் சதி முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது. எமது கூட்டணியை எந்தத் தரப்பாலும் பிளவுபடுத்த முடியாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எமது அரசு நாட்டு மக்களின் ஆணையால் அமைக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களின் அமோக வாக்குகளால்தான் ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுத்தோம். எனவே, குறுக்கு வழியில் எமது ஆட்சியை எவரும் கைப்பற்ற முடியாது எனவும் அவர் கூறினார்.
ஆளும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் நடத்திய விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களே எனக்குத் தந்தார்கள். கட்சியில் ஏகோபித்த ஆதரவுடன் தலைமைப் பதவியைப் பொறுப்பெடுத்தேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை நான் ஏற்கும்போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று சபதம் செய்தேன். அதற்கமைய நாட்டு மக்களின் பேராதரவுடன் அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கின்றேன்.
இந்தநிலையில், ஆளும் தரப்புக்குள் பிளவு என்றும், அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் பங்காளிக் கட்சிகள் தனிவழியில் என்றும் சில உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஊடகங்கள் சொல்வது போல் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விமலின் பங்களிப்பு அளப்பரியது.
பலமிக்க எமது அரசை – கூட்டணியை எந்தத் தரப்பாலும் பிளவுபடுத்த முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.