
யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே அறிவித்தபடி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வளாகத்தில் நடக்காமல் சாவகச்சேரி சிவன் ஆலய வளாகத்தில் இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது.
திலீபன் உயிர்நீத்த நாளான இன்றைய தினம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.திலீபன் நினைவேந்தலை நடத்த இம்முறை பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது.

நீதிமன்றத் தடையும் பொலிஸாரால் பெறப்பட்டது.இந்நிலையில் நினைவேந்தல்கள் நடத்துவது தமிழ் மக்களின் உரிமை என்றும், அதனைத் தடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தன.
எனினும் ஜனாதிபதி அதற்கு பதிலளிக்காத நிலையில் நினைவேந்தல் மீதான தடை நீடிக்கப்பட்டது. அதனையடுத்து, ‘தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதை அரசு நிறுத்தவேண்டும்’ என்று வலியுறுத்தி, ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த கட்சிகள் திட்டமிட்டிருந்த போதும், வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் அதற்கு தடை உத்தரவை பெற்றிருந்தனர்.
இதனால் அந்தப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
