July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழில் மேலதிக கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது’

(File Photo)

யாழில் மேலதிக கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்று குறைவடைந்து செல்கின்ற நிலையில் கடந்த இரண்டு தினங்களில் திடீரென தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு 200 ஆக காணப்பட்ட தொற்று உறுதியானோர் எண்ணிக்கை நேற்றைய தினம் 206 ஆக அதிகரித்திருக்கின்றதுடன் அச்சுவேலி சந்தைப் பகுதியை சேர்ந்த நான்கு வியாபாரிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் யாழ் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியதுடன்  யாழ் மாவட்டத்தில் அனைத்து செயற்பாடுகளும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி செயற்படுமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அச்சுவேலிப் பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளி மாவட்டத்திலுள்ள சந்தையுடன் தொடர்புபட்டதன் காரணமாகவே தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இன்றையதினம் அச்சுவேலி சந்தையுடன் தொடர்புடையோருக்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே சந்தையை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.