இலங்கையில் இன்றைய தினத்தில் 936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
74,056ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக நான்காவது நாளாக 900 ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
773 பேர் குணமடைந்தனர்
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 773 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 66,984 பேர் குணமடைந்துள்ளதுடன், 6693 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 384 ஆக உயர்வடைந்துள்ளது.
வடக்கில் 10 பேருக்கு தொற்று
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் நால்வர் அச்சுவேலிச் சந்தையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட தனியார் பேருந்து நடத்துனரின் மனைவியும் , மகளும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.