October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொது மக்களுடன் மோதலில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சீருடையில் இருந்த இராணுவ சிப்பாய்க்கும், பொது மக்கள் குழுவுக்கும் இடையில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இராணுவத்தின் வெகுசன ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளியை அடிப்படையாக கொண்டே இவ் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணைகளில் வாக்குவாதம் காரணமாகவே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது என்றார்.

இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்த அவர் இராணுவத்தின் நடத்தை விதிகளை மீறும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஒழுக்கமிக்க இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையில் உள்ளவர்கள் மேற்கொள்ளப்படும் ஒழுக்கமீறல் நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எல்லா நேரங்களிலும் அனைத்து இராணுவ வீரர்களின் ஒழுக்கத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.

சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டு வரும் குறித்த காணொளியில் இராணுவ அதிகாரி ஒருவர் வர்த்தக நிலையமொன்றில் மோதலில் ஈடுபடுவதையும், தகாத வார்த்தைகளில் வர்த்தக நிலையத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் காணமுடிகின்றது.

அத்தோடு அவர் மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.