தேசிய மரபுரிமைகள் தொடர்பான பாடநெறியை தமிழ் மொழி மூல கல்வியிலும் இணைப்பது குறித்து ஆராயுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை பிரதமரிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு மிஹிந்தலையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த பௌத்த உரிமைகள் ஆணைக்குழு நாடு முழுவதும் பௌத்த உரிமைகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி அறிக்கையை தயாரித்துள்ளது.
அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜகத் சுமதிபாலவினால் அந்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அதேநேரம், நவீன பௌத்த மத வரலாறு மற்றும் பௌத்த மாநாடுகளின் நூற்றாண்டு மலரும் அவரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் மரபுரிமைகள் அனைவருக்கும் சொந்தமானது என சுட்டிக்காட்டியுள்ள புதிய சிஹல ராவய தேசிய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், இந்நாட்டின் தொல்பொருள் மதிப்புகளை தமிழ் மொழிக் கல்வியில் சேர்ப்பது குறித்து ஆராயுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
அது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தேசிய மரபுரிமைகள் குறித்த அத்தியாயத்தை தமிழ் மொழிக் கல்வியில் இணைப்பது குறித்து ஆராய்ந்து அறியத்தருமாறு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.