உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரே, ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்காகவே சட்ட மா அதிபர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இவ் ஆணைக்குழு, தமது இறுதி அறிக்கையை 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்திருந்தது.
இதில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீதே, குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆணைக்குழு தமது விசாரணைகளின் போது 214 நாட்களில் 457 பேரிடமிருந்து சாட்சிகளை பதிவு செய்தது.
அவர்களில் அரசியல், பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்கள், அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் அடங்குவர்.
இந்த அறிக்கை 472 பக்கங்கள், 215 இணைப்புகள் மற்றும் 06 தொகுதிகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.