July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் நீக்கி ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்திவிட முடியாது”

இலங்கையில் ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற அரசாங்கத்தின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் முஸ்லிம்களின் சட்டங்களை மாத்திரமன்றி மற்றைய இன, மத மற்றும் சமூகங்களுடன் தொடர்புடைய தனியார் சட்டங்களையும் நீக்க வேண்டுமென்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முஸ்லிம்களின் சட்டங்களை மாத்திரம் நீக்க வேண்டுமென்று கோரிக்கைகளை விடுப்பது இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிகழமை முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்த அபே ஜனபல கட்சி எம்.பியான அதுரலிய ரதன தேரர், இது தொடர்பாக நீதி அமைச்சரிடம் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.

இந்த கேள்விகளுக்கு நீதி அமைச்சர் இன்றைய தினம் சபையில் பதிலளித்தார்.
இதன்போது இலங்கையில் கண்டிய சட்டம், யாழ்ப்பாண திருமணச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் விவாகச் சட்டம், பௌத்த கிராமங்கள் மற்றும் விகாரைகள் சட்டம், இந்துக் கலாசார சட்டம் என பலதரப்பட்ட தனியார் சட்டங்கள் செயற்பாட்டில் இருப்பதாக குறிப்பிட்டார்.

இவ்வாறு இருக்கையில் முஸ்லிம்களின் சட்டத்தை மாத்திரம் நீக்க வேண்டுமென்று கோசமிடுவது இன முரண்பாடுகளுக்கே கொண்டு செல்லும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி நாட்டில் ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் தனியார் சட்டங்கள் அனைத்தையும் ஒன்றாக இல்லாமல் செய்ய வேண்டும் என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.